30 ஆண்டுகளுக்கு பிரதிநிதித்துவத்தில் மாற்றம் கூடாது! முதலமைச்சர் தலைமையில் தீர்மானம்!!

 
Stalin

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு தொகுதி மறு சீரமைப்பு செய்வதை தடுக்கும் வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாஜக, தமாகா, நாம் தமிழர் கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றன.

கூட்டத்தில் விவாதத்திற்குப் பிறகு தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

”நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. தொகுதி மறுசீரமைப்பு தென்னிந்திய மாநிலங்களின் மீதான மிகப்பெரிய தாக்குதல். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயகரமான செயல். கூட்டாட்சி தத்துவத்திற்கும் தென் மாநில அரசியல் உரிமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இது தமிழ்நாட்டு அரசியல் உரிமைகள் மக்கள் பிரதிநிதித்துவத்தின் மீதான நேரடி தாக்குதல்.

இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை இந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு மனதாக கடுமையாக எதிர்க்கிறது!  30 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் மாறுதல் கூடாது என பிரதமர் மோடி உறுதியளிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கவும், குழு அமைக்க கட்சிகளுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கவும் இந்தக்கூட்டத்தில் தீர்மானம்  இயற்றப்பட்டது

From around the web