ராமர் பெயரில் கோவில்களில் நாளை பூஜை செய்ய தடையில்லை.. நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு கண்டனம்!
தமிழ்நாட்டில் கோவில்களில் ராமர் பெயரில் பூஜைகள் நடத்த தடை என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்தி பரப்புவதாக அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம் 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கும். கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம், மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களை கொண்டுள்ளது.
கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. ராமர் கோவில் குடமுழுக்கு நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவில்களில் ராமர் பெயரில் பூஜைகள், அன்னதானம் வழங்க, பிரசாதம் வழங்க தடை விதிக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பிலோ இதனை திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளில் பூஜைகள் செய்யவோ, அன்னதானம் - பிரசாதம் வழங்கவோ எந்த தடையுமே விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இது தொடர்பான வதந்தி செய்திகள் காட்டுத் தீயாக பரவி கொண்டிருக்கின்றன.
இந்த வதந்தியை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் இந்த இந்து மத விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்தகுறியது” என்று பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்தகுறியது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.