மரணத்தில் இடம் வாங்கி கொடுக்கும் நீட்.. கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி!!

 
Vairamuthu

மாணவர்கள் மருத்துவத்தில் இடம்பெற வேண்டும் என்று போராடும் நிலையில் நீட் தேர்வு மரணத்தில் இடம் வாங்கி கொடுக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 21-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக கையெழுத்து போட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். 50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு அந்த கையெழுத்து ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான இந்த கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள்,  பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்ட நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள கவிஞர் வைரமுத்துவின் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து திமுக சென்னை தென்மேற்கு மாவட்டம் இளைஞர் அணி சார்பில் பெறப்பட்டது.

Neet

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவிஞர் வைரமுத்து கூறியதாவது, நீட் விலக்கிற்கு எதிராக பெறப்படும் லட்ச கணக்கான கையொப்பங்களில் என்னுடையது ஒன்று என்பதில் பெருமைப்படுகிறேன். என் கடமையை சரியாக ஆற்றியதில் கர்வம் கொள்கிறேன். நீட் தேர்வு மாணவர்களுக்கு இழைக்கப்படும் ஒரு கல்வி அநீதி. அது எதிர்கால அநீதி என்பதை உணர்ந்தவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. மேலும் நீட் தேர்வில் ஒரு சம நிலை இல்லை. எழுதப்படுகிற தேர்வில் எழுதும் மாணவர்களுக்கு சமநிலையும் சமூக நீதியும் இல்லை.

சிபிஎஸ்சி தேர்தலில் படித்து வெளிவரும் மாணவர்களுக்கும், அரசு பள்ளியில் படித்து தேர்வு எழுதிவிட்டு வரும் மாணவர்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பதை சமூகம் நன்று அறியும். எனவே தான் 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ இடச்சேர்கை ஒதுக்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் ஆழ்ந்த குரலாக இருக்கின்றது.

இது அரசின் குரல் மட்டுமல்ல. இது பெரிய கல்வி திட்டத்தின் குரல் மட்டுமல்ல. இது சமூகத்தின் குரல், ஒடுக்கப்பட்டவர்களின் குரல். ஏழை பணக்காரன் என்னும் வர்க்க வேதத்தில் எழுகின்ற குரல். இதை இந்த நாடு புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவத்தில் இடம்பெற வேண்டும் என்று போராடுகின்ற மாணவர்களுக்கு மரணத்தில் இந்த நீட் இடம் வாங்கி கொடுக்கிறது. இதுவரை நீட் தேர்வுகளில் 16 பேர்களை இதுவரை காவு வாங்கி உள்ளது. எனவே, நீட் தேர்வுக்கு எதிராக, நீட் விலக்கிற்கு ஆதரவாக நாங்கள் இன்று கை எழுத்திட்டோம்.

Vairamuthu

ஒன்றிய அரசை பார்த்து கல்வியாளர்கள் கேட்கிற கேள்வி, அரசு கேட்கிற கேள்வி, பெற்றோர்கள் கேட்கிற கேள்வி, மாணவர்கள் கேட்கிற கேள்வி, பாதிக்கப்பட்டவர்கள் கேட்டிகிற கேள்வி அனைத்தும் ஒன்று தான். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிவிடுங்கள். எங்கள் நீட் விலக்கு அனுப்பப்பட்ட மசோதாவில் குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு கையெழுத்திட்டு தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்.

தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவில் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறதோ அது அந்தந்த மாநிலத்தின் உரிமை என்று செய்துவிடுங்கள். நீட் யாருக்கு தேவையோ அவர்கள் எழுத்தட்டும். விலக்கு வேண்டும் என்று நினைப்பவர்கள் விதி விலக்கு பெறட்டும். இந்த தீர்வு நிரந்தர தீர்வாக அமைய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

From around the web