நீட் பயிற்சியில் சேர்ந்த மாணவி தற்கொலை.. ராசிபுரம் அருகே சோகம்!

 
Vennandur

ராசிபுரம் அருகே நீட் பயிற்சியில் சேர்ந்த ப்ளஸ்-1 மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூர் ஆயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (47). சலவை தொழிலாளியான இவருக்கு சாவித்ரி (45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஞானப்பிரியா(15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஞானப்பிரியா அங்குள்ள அரசு பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தார்.

Suicide

இந்த நிலையில் நேற்று முன்தினம் அரையாண்டு தேர்வெழுதி விட்டு வீட்டு வந்த அவர் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர், மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். இது குறித்து வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெண்ணந்தூர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஞானப்பிரியா நீட் தேர்வில் பங்கேற்பதற்காக பள்ளியில் நடைபெறும் பயிற்சியில் சேரவுள்ளதாக தந்தை பழனிச்சாமியிடம் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான சிறப்பு வகுப்பிலும் சேர்ந்துள்ளார்.

Vennandur PS

வகுப்பில் படிக்கும் பாடத்துக்கும், நீட் தேர்விற்கான படிப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாகவும், தனக்கு எதுவுமே புரியவில்லை எனவும் பெற்றோரிடம் கூறி புலம்பியுள்ளார். மேலும், ஆங்கிலம் சரியாக வராததால் மனவேதனையில் இருந்து வந்த ஞானப்பிரியா வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web