பழ.நெடுமாறன் 93வது பிறந்தநாள்.. சுபவீரபாண்டியன் உருக்கமான வாழ்த்து!!

முதுபெரும் தலைவர் பழ.நெடுமாறன் இன்று 93வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள திராவிடத் தமிழர் இயக்க பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.அய்யா நெடுமாறன் வாழ்க, வாழ்கவே! என்ற தலைப்பிட்டு ,
“22 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் (மார்ச் 10), பொடா சட்டத்தின் கீழ் சிறையிலிருந்த நானும், மறைந்த அண்ணன் பரந்தாமனும் ஒரு வாழ்த்துச் செய்தியை எழுதி, அதனை உடனடியாகக் கடலூர் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். சிறை அதிகாரிகளும் அனுப்பி வைத்தார்கள்! அது அய்யா நெடுமாறன் அவர்களுக்கான 70 ஆவது பிறந்தநாள் வாழ்த்து!
சிறையிலிருந்து வெளிவந்த பின்பு, 2006 ஏப்ரல் 17 இல், அய்யா அவர்களின் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தில் இருந்து நான் விலகி வெளியே வந்து விட்டேன்! 2006 மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்னும் என் கருத்தை, இயக்கத்தின் செயற்குழு ஏற்க மறுத்து, நடுநிலை வகிக்க வேண்டும் என முடிவு செய்ததால், வேறு வழியின்றி கட்சியிலிருந்து விலகினேன்.
ஆனாலும், அய்யா நெடுமாறன் அவர்கள் மீது நான் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் என்றும் மாறியதில்லை. அவரும் என்னிடத்தில், பிரிந்து வந்த பிறகும், அதே அன்பு காட்டினார்.
இன்று அய்யா 92 வயதை நிறைவு செய்து, 93 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கின்றார். தொலைபேசியில் நானும் என் துணைவியாரும் அவருக்கு வாழ்த்துக்களைச் சொன்னோம். அது ஒரு நெகிழ்வான தருணம் !
அந்த நாள்களில் அவரோடு காரில் நான் நிறையப் பயணம் செய்திருக்கிறேன். அந்தப் பயணங்களில் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளை அவர் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் பதற்றமில்லாமல், நிதானமாக நடந்து கொள்வது எப்படி என்பதை அய்யாவிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், அவர் மூலம் நான் கற்றுக் கொண்டவையும், பெற்றுக் கொண்டவையும் மிகுதி! இன்றும் அந்த நன்றி உணர்ச்சி மாறாமலே இருக்கிறேன்!
இன்று தொலைபேசியில் பேசும் போது, அடுத்து ஒரு நூலைத் தான் எழுதியிருப்பதாகவும், ஏப்ரல் மாதம் அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டும் என்றும் நெடுமாறன் அய்யா சொன்னபோது, உழைப்பதற்கு வயது ஒன்றும் தடையில்லை என்பது புரிந்தது ! அவர் விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கமாக, நீண்ட காலம் பழகியவர்! ஆனால் இன்று வரை அதை அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை! அதை வைத்து அவர் திறள் நிதி எதையும் திரட்டியதும் இல்லை!
அய்யா நெடுமாறன் வாழ்க வாழ்கவே!” என்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.