சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்.. சங்ககிரி அருகே பரபரப்பு
சங்ககிரி அருகே இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், வைகுந்தம் பகுதியில் சர்வீஸ் சாலையின் ஓரம் உள்ள சிறிய தரைமட்ட பாலத்தின் கீழ் வீசப்பட்டிருந்த சூட்கேஸில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், சேலம் மாவட்ட எஸ்பி கெளதம்கோயல், சங்ககிரி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயினி (சங்ககிரி), பேபி(இடைப்பாடி), செந்தில்குமார் (மகுடஞ்சாவடி) மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்தனர்.
அப்போது, அதில் அழுகிய நிலையில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் நிர்வாண நிலையில் இருந்தது. முகத்தில் 3 பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு மூடப்பட்டு, பெட்ஷீட்டால் உடல் முழுவதும் சுற்றப்பட்டிருந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், தலை முடி இல்லை. அந்த பெண்ணின் இரு கைகளிலும் தலா 6 விரல்கள் இருந்தது. இதையடுத்து, தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து, தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க விடப்பட்டது. அது அங்கிருந்து சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலம் வீசப்பட்டிருந்த இடம், ஆள்நடமாட்டம் அதிகமில்லாத ஒதுக்குப்புறமாக இருப்பதால், வேறு எங்கோ வைத்து இளம்பெண்ணை கொலை செய்த மர்ம நபர்கள், சூட்கேசில் அடைத்து எடுத்து வந்து, இந்த பகுதியில் வீசி விட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், அந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்பெண்ணின் உடலில் எங்கும் காயங்கள் இல்லை. முகமும் சிதைக்கப்படவில்லை. அவரை முகத்தை பாலிதீன் கவரால் மூடி மூச்சை திணறடித்து கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகனங்கள் குறித்த பட்டியலை சேகரித்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க, சங்ககிரி டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐக்கள் ராமன், கண்ணன் ஆகியோர் தலைமையில், 3 தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை கொன்று, சூட்கேசில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.