நாகை எம்பி செல்வராஜ் திடீர் மரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 
Selvaraj

நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 67.

நாகப்பட்டினம் தனி தொகுதியின் எம்.பியாக இருப்பவர் எம்.செல்வராஜ். கடந்த 1989, 1996,1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும் இவர் இந்த தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.  இந்த முறை உடல் நலம் குறைபாடு காரணமாக தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா காலத்தில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது. அது தவிர அண்மையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Selvaraj

இந்த நிலையில் கடந்த மே 2-ம் தேதி சென்னை மியாட்  மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சித்தமல்லிக்கு கொண்டு வரப்பட உள்ளது. நாளை காலை சித்தமல்லியில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

MKS

இந்த நிலையில், நாகை எம்.பி. செல்வராஜின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web