முரசொலி செல்வம் காலமானார்.. உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி

மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் (84) பெங்களூரில் இன்று காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார். முரசொலி செல்வம் மறைவு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திமுகவின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக முரசொலி செல்வம் இருந்தார். இவர் ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்கு மேல் முரசொலியில் பணியாற்றி இருக்கிறார். அவரது மறைவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை பெங்களூரில் இருந்து சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு முரசொலி செல்வம் உடல் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முரசொலி செல்வம் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
"சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 10, 2024
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான்… pic.twitter.com/3pGTVtn14D
முன்னதாக முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்.
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை - கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.