மாநகராட்சி, நகராட்சிகள் விரிவாக்கம்! புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்கம்!!

 
TN-Govt

தமிழ்நாட்டின் 16 மாநகராட்சிகளை விரிவாக்கவும் 41 நகராட்சிகளை விரிவு படுத்தவும் மற்றும் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து 5 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

”பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், , திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன்  ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும் 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தக்க சட்டவகைமுறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சியாக அமைந்துள்ள பகுதிகளை (contiguous areas) ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும், இடஞ்சார்ந்த திட்டமிடல் (spatial planning) உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்தல் / திறம்பட செயலாக்குதல் மூலம் திட்டமிடப்பட்ட நகர்ப்புர வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும்.
 

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அரசு, நகரமயமாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் சீரான நகர்ப்புர வளர்ச்சி, செம்மையான நிருவாகம் ஆகியவற்றை உறுதிசெய்ய தேவையான இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது ” என்று தமிழ்நாடு அரசுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

From around the web