பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து விபத்து.. தொழிலாளி பரிதாப பலி!
தாம்பரம் அருகே பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட இருந்த தொழிலாளி மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பகுதியில் தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில் பாதாள சாக்கடைக்கான பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கிக் கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கிய முருகானந்தத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முருகானந்தத்தின் உயிரற்ற உடலை போலீசார் மீட்டனர்.
தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.