வாகன ஓட்டிகளே உஷார்... 14 நாட்களில் அபராதம் கட்டலையா.. வாகனம் பறிமுதல்.. சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!!

 
kapil kumar

சென்னையில் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்களின் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பொதுமக்கள் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகளில் போக்குவரத்து தொடர்பாக புகார் தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக 2,062 புகார்களை சரி செய்திருக்கிறோம்.

கடந்த இரண்டு மாதத்தில் 1,267 புகார்கள் வந்திருக்கிறது. இதில் 90 சதவீத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒரு வழி பாதையில் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது மற்றும் வாகனத்தை ரேஷ் டிரைவிங் மூலமாக இயக்குவது  என போக்குவரத்து விதிமீறல் ஈடுபட்டால் பொதுமக்களே வீடியோ மூலமாக புகார்கள் தெரிவிக்கலாம். அதன்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

குறிப்பாக போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்களின் வாகன எண், நடைபெறும் இடம் மற்றும் காலம் ஆகியவற்றோடு கூடிய புகைப்படம் மற்றும் வீடியோவோடு புகார் அளிக்கலாம். இவ்வாறாக சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கும் வசதியை பழிவாங்கும் செயலுக்கு பயன்படுத்திக்கொண்டால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் சென்னை காவல்துறையின் நடவடிக்கையை அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்கள் பதிவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Number plate

சென்னை போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து பல்வேறு சிறப்பு தணிக்கைகள் செய்து போக்குவரத்து விதிமுறைகளை கட்டுப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதியில் அந்த பகுதிக்குட்பட்ட போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளனர். அதில் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள் வாகனத்தில் ரூ.500-க்கு அபராதம் விதிக்கப்பட்டு சலான்கள் போக்குவரத்து போலீசாரால் ஒட்டப்படும்.

இவ்வாறாக அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள் மீண்டும் நம்பர் பிளேட்டுகளை மாற்றாமல் போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டால் 1,500 ரூபாய் என்ற அளவில் 3 மடங்கு அபராதம் செலுத்த வேண்டும். சாலைகளில் அரசு பேருந்து பொறுத்தவரை அண்ணாநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏ.என்.பி.ஆர் கேமரா மூலமாக அதிகப்படியாக விதிமீறல்கள் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மீறி இருக்கின்றனர். இது தொடர்பாக அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.என்.பி.ஆர் கேமராவை பொறுத்தவரை அரசு வாகனம் தனியார் வாகனம் என்றெல்லாம் பார்க்காது. யார் விதிகளை மீறினாலும் உடனடியாக அபராத தொகை சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு குறுந்தகவலாக சென்று விடும்.

ஏ.என்.பி.ஆர்.கேமராவை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு ரூ.10.5 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்குள் அதற்கான டெண்டர் விடப்பட்டு முதற்கட்டமாக அண்ணா சாலை,  ஈகா தியேட்டர் மற்றும்  மிண்ட் ஆகிய 3 பகுதிகளில் வர இருக்கிறது. குறிப்பாக 14 ஜங்ஷன்களில் 56 அதிநவீன கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் எம் பரிவாகன் செயலி மூலம் வாகன எண்ணை பதிவிட்டு எவ்வளவு அபராத தொகை உள்ளது என தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு நிலுவையில் உள்ள அபராத தொகையை சென்னை காவல்துறையின் கால் சென்டர் உதவியுடன் உடனடியாக செலுத்தவேண்டும்.

TRaffic

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களை  அடையாளம் கண்டு சட்டம் ஒழுங்கு போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே அவர்களுடைய கல்லூரியை கண்டறிந்து கல்லூரிக்கும் தகவல்களும் கொடுக்கப்படுகிறது. அடுத்தபடியாக அவர்களுடைய பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மதுபோதையில் வாகன ஓட்டி அபராதம் விதித்து 14 நாட்களுக்குள், அபராத தொகை செலுத்தவில்லை எனில் வாகனம், அல்லது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். போக்குவரத்து காவல்துறை தொடர்பான புகார்களை 90031 30103 என்ற எண்ணின் மூலமாக வாட்ஸ்அப்பில் அளிக்கலாம்” என தெரிவித்தார்.

From around the web