2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் மூழ்கி பலி.. நீச்சல் கற்றுக்கொடுத்த போது நேர்ந்த பரிதாபம்

 
Veppankuppam

வேலூர் அருகே நீச்சல் பழகிய 2 குழந்தைகளுடன் தாயும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் (40). இவரது மனைவி பவித்ரா (30). இந்த தம்பதிக்கு ரித்திக் (9) என்ற மகனும், நித்திகா ஸ்ரீ (7) என்ற மகளும் இருந்தனர். தற்போது, கோடை விடுமுறையை முன்னிட்டு பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா, தினமும் தனது பிள்ளைகளை அருகில் உளள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Veppankuppam

இந்த நிலையில், இன்று காலை பவித்ரா, தனது இரு பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் இவர்கள் வீடு திரும்பாத நிலையில், சிறுமி நித்திகா ஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Veppankuppam PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார், ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடல்களை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web