பைக் மீது லோடு லாரி மோதியதில் தாய், மகன் பரிதாப பலி.. மேல்மருவத்தூர் அருகே சோகம்!

 
Melmaruvathur

மேல்மருவத்தூர் அருகே பைக் மீது லோடு வாகனம் மோதி தாய், மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி வசந்தா (45). இந்த தம்பதிக்கு கார்த்திக் (25) என்ற மகன் இருந்தார். நேற்று காலை தாய் வசந்தாவும் மகன் கார்த்திக்கும் இருசக்கர வாகனத்தில் மேல்மருவத்தூருக்கு புறப்பட்டனர். வந்தவாசி - சோத்துப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சோத்துப்பாக்கம் அருகே எதிரே வந்த லோடு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது.

Accident

இதில் தாய், மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவ்ம தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

Melmaruvathur PS

விபத்தில் இறந்து வசந்தா, சென்னையில் வீட்டு வேலை செய்து வருவதாகவும், அதற்காக மேல்மருவத்தூரில் இருந்து ரயில் மூலம் சென்னை செல்வதற்காக தனது மகனுடன் சொந்த ஊரிலிருந்து மேல்மருவத்தூர் ரயில் நிலையம் வரும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டு தாய், மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web