கல்குவாரி குட்டையில் 4 மாத குழந்தையுடன் தாய் மூழ்கி பலி... நெல்லை அருகே சோகம்!!

நெல்லையில் மன நலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் 4 மாத குழந்தையுடன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் அடுத்து உள்ள கும்மிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வளர்மதி. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளது. கண்ணனின் மனைவி வளர்மதி சற்று மனநலம் பாதிக்க பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பாக அவர் வீட்டில் இருந்து காணாமல் போனதாக ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் பல்வேறு சமூக வலைதளங்களிலும் இருவர் குறித்து காணவில்லை என தகவல்கள் பகிரப்பட்டு வந்தது .
இதனிடைய நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் குளத்தில் குழந்தையின் உடலும் வளர்மதி உடலும் மிதப்பதை பார்த்து ராதாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வள்ளியூர் தீயணைப்பு துறையினர் இருவரது உடலையும் மீட்டுள்ளனர்.
மேலும் ராதாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கல்குவாரி குட்டையில் விழுந்து தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.