2 மகன்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை... குடும்பத் தகராறில் விபரீதம்
குளித்தலை அருகே குடும்பத் தகராறில் 2 மகன்களுடன் தாய் கிணற்றில் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சி கீழ சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் அருண். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு தர்ஷன் (6), நிஷாந்த் (4) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். தர்ஷன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு வீட்டின் அருகே உள்ள ஒரு விவசாய தோட்டத்திற்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் 2 மகன்களையும் கிணற்றில் தூக்கி வீசி விட்டு, தானும் கிணற்றில் குதித்து விட்டார்.
இதில், மூத்த மகன் தர்ஷன் கிணற்றின் உள்ளே மோட்டார் குழாய்க்கு கட்டி இருந்த கயிற்றில் மாட்டிக்கொண்டான் லட்சுமியும், நிஷாந்த்தும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மற்றும் திருச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் போராடி லட்சுமி, நிஷாந்த்தை மீட்டனர்.
உயிருடன் மீட்கப்பட்ட தர்ஷன் முதலுதவி சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தர்ஷனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லட்சுமி, நிஷாந்த் உடல்கள் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.