3 மாத ஆண் குழந்தை மாயம்..  பெருங்குடி கிடங்கில் சடலமாக மீட்பு.. போலீஸ் போட்ட போடில் அம்பலமான நாடகம்

 
baby

சென்னையில் பிறந்து 3 மாதமான ஆண் குழந்தையை தாயே குப்பைத் தொட்டியில் வீசி விட்டு கடத்தல் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலி. திருச்சியைச் சேர்ந்த இவர்களுக்கு 3 மாதத்தில் திரு என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் ரவி இங்கு தனது குடும்பத்துடன் மதுரவாயலுக்கு குடிபெயர்ந்துள்ளார். நேற்று மாலை அஞ்சலி தனது குழந்தை திருவை தூங்க வைத்து விட்டு அருகில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக புறப்பட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஆண், பெண் இருவர் இங்கு வீடு வாடகைக்கு உள்ளதா என்று அஞ்சலியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அஞ்சலி தனக்குத் தெரியாது என்றும், நாங்கள் குடி வந்தே 3 நாட்கள் தானாகிறது என்று கூறிவிட்டு குளிக்கச் சென்றார். பின்னர் குளித்து விட்டு வந்து பார்த்த போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சிடைந்தார்.

இதுகுறித்து அஞ்சலி மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஞ்சலியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Baby

இருப்பினும் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழந்தை கடத்தப்பட்டது உண்மையா அல்லது கணவன் மனைவி இருவரும் நாடகமாடுகிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். பின்னர் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அஞ்சலி கையில் ஒரு குப்பை பையை கொண்டு செல்வது பதிவாகியிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அஞ்சலியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது குப்பையை ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டதாக தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது தடயம் ஏதும் கிடைக்கவில்லை. அஞ்சலியிடம் நடத்திய தொடர் விசாரணையில் தனது தோழி அனிதா - சுரேஷ் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அவர்களிடம் கொடுத்து குழந்தையை வளர்க்கச் சொன்னதாக கூறியுள்ளார்.

Maduravoyal PS

இதையடுத்து அஞ்சலியை அழைத்து சென்று பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அனிதாவை போலீசார் தேடினர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அஞ்சலி திடீரென போலீசாரிடம் குழந்தை இறந்து விட்டதாகவும், அதனைத் துணியில் சுற்றி குப்பைத் தொட்டியில் வீசி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொண்டு சென்று கொட்டியது தெரியவந்தது.

இதனை அடுத்து அஞ்சலியை கைது செய்த போலீசார் குப்பைக் கிடங்கில் குழந்தை உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் தேடினர். குழந்தை உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே குழந்தை இயற்கையாக இறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டு இறந்ததா என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web