ஓடும் ரயில் முன் விழுந்து தாயும், குழந்தைகளும் பலி.. ராணிப்பேட்டை அருகே பரபரப்பு

 
Ranipet

ராணிப்பேட்டை அருகே வாலாஜா ரயில் நிலையத்தில் இன்று காலை 2 பெண் குழந்தைகளுடன் தாய் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வேலம் கிராமத்தின் ஒத்தவாடைத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (39). ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவரது முதல் மனைவி விஜயலட்சுமி (34). திருமணமான ஓராண்டில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மணியம்பட்டு ரோடு சிப்காட் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு விஜயலட்சுமி சென்றுவிட்டார்.

Ranipet

இதையடுத்து, வெண்ணிலா(28) என்பவரை அறிவழகன் கடந்த 2017ம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜெனு (6), தாருணிகா (4) என 2 பெண் குழந்தைகள் இருந்தனர். ஜெனு 1ம் வகுப்பும், தாருணிகா எல்கேஜியும் படித்து வந்தனர். இந்நிலையில் முதல் மனைவி விஜயலட்சுமி அடிக்கடி அறிவழகன் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு செல்வாராம். அதேபோல் கடந்த 22-ம் தேதி விஜயலட்சுமி, அறிவழகன் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு நேற்று அவரது வீட்டிற்கு திரும்பி சென்றாராம்.

இந்நிலையில் இன்று காலை 9.35 மணியளவில் வெண்ணிலா, தனது 2 மகள்களை அழைத்துக்கொண்டு வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவ்வழியாக வந்த எர்ணாகுளம் - ஹவுரா செல்லும் அந்தோதியா எக்ஸ்பிரஸ் ரயில் முன் திடீரென தனது 2 மகள்களுடன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதில் உடல் சிதறி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Police

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக வெண்ணிலா தனது 2 குழந்தைகளுடன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web