சென்னையில் கூடுதல் பிங்க் ஆட்டோக்கள்... பெண் ஓட்டுனர்கள் விண்ணப்பிக்கலாம்!!

 
Pink Auto

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய முயற்சியாக, சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதிசெய்திடும் வகையில் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் அறிவிக்கப்பட்டு 250 பெண்களுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டுள்ளது.மேலும் கட்டணங்கள் ஏதுமின்றி (commission) “ஊர் கேப்ஸ்” என்ற செயலி பயன்படுத்த வழிவகை செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓலா, ஊபரில் அழைப்பது போல் பொதுமக்கள் பிங்க் ஆட்டோவுக்கு பதிவு செய்ய முடியும்.

தொடர்ந்து CNG ஆட்டோக்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 06.04.2025 தேதி வரை விண்ணப்பங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் வரவேற்கப்படுகின்றன.

i. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
ii. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
iii. 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
iv. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
v. சென்னையில் குடியிருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுனர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை 600 001. சிங்காரவேலர் மாளிகை, 8-ஆவது தளத்தில் செயல்படும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 06.04.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

From around the web