அதிக அரியர்.. விடுதியில் மாணவி எடுத்த விபரீத முடிவு.. அண்ணா பல்கலைக்கழகத்தில் பரபரப்பு!

 
Chennai

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் 3-ம் ஆண்டு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் டேவிட். இவரது மகள் சரோஜ் பெனிட்டா (21). இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்ச் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி சரோஜ் இன்று காலை வகுப்பிற்கு செல்லாமல் அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

suicide

இந்த நிலையில் மதியம் அவருடன் அறையில் தங்கி இருந்த சக மாணவர்கள் வகுப்புக்குச் சென்று அறைக்கு திரும்பி வந்து பார்த்தனர். அப்போது சரோஜ் பெனிட்டா தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.‌ பின்னர் கல்லூரி ஊழியர்கள் மாணவி சரோஜை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் இறந்த மாணவி சரோஜ் பெனிட்டா உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Kotturpuram PS

முதற்கட்ட விசாரணையில் சரோஜ் பெனிட்டாவிற்கு அதிக அரியர்கள் இருந்ததும், அவருடன் படித்த சக மாணவர்கள் 5-ம் ஆண்டில் படித்து வருவதால் இவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் இதுதொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web