மன்னராட்சியா? உதயநிதி ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் ஆதரவு!!
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு அரசியல் களம் பெரும் பரபரப்பு அடைந்துள்ளது. அந்த விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கருத்துக்களுக்கு விசிக மற்றும் திமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரனும் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
”தேர்தல் அரசியல் மூலம் மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்து முதலமைச்சரை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பிறப்பால் ஒருவர் முதல்-அமைச்சராவதாக ஆதவ் அர்ஜுனா சொல்லியிருப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தேர்தலில் எம்.எல்.ஏ.வாக ஜெயித்துவிட்டுதான் வந்திருக்கிறார். அதை நாம் எப்படி குறை சொல்ல முடியும்?
தேர்தலில் நிற்காமல் நேரடியாக பதவிக்கு வந்தால் அதை குறை சொல்லலாம். ஒருவரின் தந்தையோ, தாயோ அரசியலில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது இல்லை. சில பதவிகளுக்கு அனுபவம் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. நான் தி.மு.க.விற்கோ, அல்லது வாரிசு அரசியலுக்கோ ஆதரவாக பேசவில்லை. எதார்த்தமான கருத்தை சொல்கிறேன்.
எந்த கட்சியாக இருந்தாலும், அனைத்து தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்றுதான் சொல்வார்கள். அதை எதிர்க்கட்சிகள் முறியடிப்போம் என்று சொல்வது தவறு இல்லை, ஆனால் அதை ஆணவம் என்று எப்படி சொல்ல முடியும்? மக்கள்தான் இறுதி முடிவெடுக்கப் போகிறார்கள்." என்று செய்தியாளார்களிடம் கூறியுள்ளார் டி.டி.வி தினகரன்.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக டி.டி.வி தினகரன் பேசியிருப்பது திமுக, அமமுகவினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் கட்சி தங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்து தான் விஜய்யின் அரசியலை டி.டி.வி.தினகரன் மறைமுகமாகச் சாடுகிறரோ என்ற கேள்விகளும் எழுகின்றன.