ராட்சத அலையில் சிக்கி மாயமான மாணவர்கள்.. 4 பேரின் உடல் மீட்பு.. சுற்றுலா வந்த இடத்தில் சோகம்!

 
Mamallapuram

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த 5 கல்லூரி மாணவர்கள் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்த கலை கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர் மாவட்டம் நலகாம்பள்ளியை சேர்ந்த கலை கல்லூரி மாணவர்கள் 22 பேர் என மொத்தம் 40 பேர் 2 குழுக்களாக நேற்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர். புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், கடற்கரைக்கு சென்றனர். அங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதில் 10 மாணவர்களை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. கரையில் இருந்த சக மாணவர்கள் தங்கள் நண்பர்களை காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். அப்போது கடற்கரையில் நின்றிருந்த மீனவர்கள் மணிமாறன், ராஜி, விஜி, சதீஷ் ஆகியோர் சர்பிங் பலகையின் உதவியுடன் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய 5 மாணவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

water

நலகாம்பள்ளியை சேர்ந்த விஜய் (24) என்ற மாணவர் ராட்சத அலையில் சிக்கியதில் கடலில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. அனந்தபூர் பகுதியை சேர்ந்த தனியார் கலைக்கல்லூரி மாணவர்கள் பெத்துராஜ் (26), ஷேசாரெட்டி (25), நலகாம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மோனிஷ் (18), பார்த்துஷா (19) ஆகியோர் கடலில் மாயமானார்கள். கடலில் மாயமான 4 மாணவர்களின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடல் அலையில் சிக்கி மாயமான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 மாணவர்களின் உடலை 2-வது நாளாகத் தேடி வந்த நிலையில், 3 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. சேஷா ரெட்டி, மோனிஷ் மற்றும் பெத்துராஜ் பிரபு ஆகியோரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாணவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Police

கரை ஒதுங்காத தன்னுடைய நண்பனின் புகைப்படத்தை வைத்து கொண்டு கடற்கரையில் 2 நாட்களாக ஊருக்கு செல்லாமல் நண்பர்கள் காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web