மாயமான சிறுவன் குளத்தில் சடலமாக மீட்பு.. சிங்கப்பெருமாள் கோவில் அருகே சோகம்!!

 
MM Nagar

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மாயமான சிறுவன் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிப்புண்ணியம் ஜூப்ளி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் யுவனேஷ் (8). சரிவர வாய் பேச முடியாத காரணத்தால் யுவனேஷை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர்.

boy-dead-body

இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி வீட்டில் அருகே விளையாடி கொண்டிருந்த யுவனேஷ் திடீரென மாயமானார். இதை தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சிறுவன் யுவனேஷ் கிடைக்கவில்லை. 

இதனால் பயந்து போன பெற்றோர் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான 8 வயது சிறுவனை தேடி வந்த நிலையில் நேற்று சிறுவனின் வீடு அருகே உள்ள ஒரு குளத்தில் மூழ்கி யுவனேஷ் இறந்து கிடப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Maraimalai Nagar PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் மற்றும் மகேந்திரா சிட்டி தீயணைப்பு வீரர்கள், குளத்தில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web