அமைச்சரின் கார் மோதி புதுமாப்பிள்ளை துடிதுடித்து பலி.. மாமியார் வீட்டுக்கு செல்லும் போது சோகம்!

 
Chennai

மாமல்லபுரம் அருகே அமைச்சரின் டிரைவர் ஓட்டி சென்ற கார் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் மோட்டார் பைக்கில் புதுமண தம்பதி சென்று கொண்டிருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும்போது சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் மோட்டார் பைக்குடன் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் புதுமாப்பிள்ளை ஜான்சன் (35) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த புதுப்பெண் ரூத்பொன் செல்வி (26) என்பவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 

Accident

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த காரை தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதனின் டிரைவர் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மயிலாடுதுறை சென்ற அமைச்சரை அழைத்து வர கார் டிரைவர் காரை ஓட்டி சென்றதாகவும், அப்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடலூரில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு தனது மனைவியுடன் ஜான்சன் மோட்டார் பைக்கில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஜான்சனுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிளும் நொறுங்கியது. 

Mamallapuram PS

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார் ஜான்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக மணமை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

From around the web