டெல்லியில் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

 
Udhayanidhi-Modi

டெல்லியில் நாளை மாலை பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

Udhayanidhi

தொடர்ந்து இன்று மாலை 3 மணியளவில் டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ் கல்விக் கழக நிர்வாகிகள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் டெல்லியில் பணிபுரியும் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். 

அதன் பின்னர் இரவு 7 மணியளவில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து இரவு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் தங்குகிறார். 

Udhayanidhi

இந்த நிலையில், டெல்லியில் நாளை (பிப். 28) பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் நாளை மாலை 4 முதல் 5 மணி அளவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரான பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார். 

மேலும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்ந்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். மேலும், ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

From around the web