அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ராஜினாமா.. என்ன காரணம்? ஆதரவாளர்கள் அதிர்ச்சி!

 
SenthilBalaji

இலாக்கா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.

2011-2016 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு தொடர்பாக அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில், 230 நாட்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், “230 நாட்களுக்கு மேல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஏற்கனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்து விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவர் அமைச்சராக நீடிப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தையும்  சுட்டிக்காட்டினார்.

Senthil Balaji

மேலும், கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அரசு வழக்கரைஞர், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்ததாகவும், அமைச்சரை நீக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Senthil-Balaji

நாளை மறுநாள், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இலாக்கா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.

From around the web