கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து.. பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. மாணவர்கள் 2 பேர் பலி!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து பயில்கின்றனர். இப்படி இருக்கையில் இவர்கள் மாலையில் புதுப்பட்டி நோக்கி செல்லும் மினி பேருந்தில் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வத்திராயிருப்பில் இருந்து வ.புதுப்பட்டிக்கு தனியார் மினி பேருந்து புறப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் பயணித்தனர். கிறிஸ்டியான்பேட்டை போதர் குளம் கண்மாய் அருகே வளைவான பகுதியில் வேகமாக சென்று திரும்பிய போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதிய மினி பேருந்து கவிழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த அரசு மேல்நிலை பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கும் வ.புதுப்பட்டி அருகே நடுப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (16), பாண்டி (16) ஆகிய இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த 20 பேர் வ.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்ப்பட்டனர். விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.