சென்னையில் உயர்மட்ட சாலையில் மெட்ரோ பஸ்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய திட்டம்!!
இந்தியாவிலேயே நகரமயமாதல் தமிழ்நாட்டில் தான் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. நகரமயமாதலால் நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாலங்கள், புறவழிச் சாலை, புறநகர் பேருந்து நிலைய இடமாற்றம். மெட்ரோ ரயில் என புதிய புதிய திட்டங்களை அமல்படுத்திய போதிலும் நெரிசல்கள் குறைந்தபாடில்லை.
மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மேலும் ஒரு புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மகேந்திரா சிட்டி வரையில் 18 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. 6 வழித்தடங்கள் போக்குவரத்திற்கும் 2 வழித்தடங்கள் அவசர உதவி வாகனங்கள் மற்றும் மெட்ரோ பேருந்துகளுக்கும் பயன்படுத்தப்படும்.
ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கும் ஒரு பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் நிறுத்தங்கள் போல், மின்சார படிக்கட்டு, குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள் என பயணிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இது ஒரு முன்மாதிரி திட்டமாக அமைய உள்ளது.
மேலும் அதிமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை, திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட சாலை, அண்ணா சாலை உயர்மட்ட சாலை என பல்வேறு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் விரிவாக்கமாக கூடுதல் 3 வழித்தடங்களுக்கான பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பூந்தமல்லி - பரந்தூர் விமான நிலையம் என இரண்டு வழித்தடங்கள் நீட்டிப்பும் செய்யப்பட உள்ளது.சென்னை போக்குவரத்து நெரிசல் இந்த திட்டங்கள் மூலம் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
