மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டு பலாத்காரம்.. அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது!
கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வீரக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் திருவிழா கடந்த 9-ம் தேதி நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் இரவு திருவிழாவையொட்டி பாட்டு கச்சேரி நடந்துள்ளது. இதனை கண்டு மகிழ சென்ற 17 வயது சிறுமி, மகிழ்ச்சியோடு வீடு திரும்பவில்லை. காரணம் 6 பேர் கொண்ட அரக்க கும்பல் சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.
ஏராளமான மக்கள் கலந்து கொண்ட இந்த பாட்டு கச்சேரியில் பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய தாயுடன்தான் வந்துள்ளார். ஆனால் அந்தக் கலை நிகழ்ச்சி நிறைவடைவதற்கு நேரம் ஆனதால், சிறுமியை அவரது தோழியுடன் விட்டுவிட்டு தாய் தனியாக வீடு திரும்பி இருக்கிறார். திருவிழா கச்சேரியில் இருந்த தன்னுடைய மகள் சில மணி நேரத்தில் வீடு திரும்புவார் என எதிர்பார்த்து காத்திருந்தார் அந்த தாய். ஆனால் நடந்ததோ வேறு. இரவு நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராததால் ஒரு விதமான அச்சம் தாயை தொற்றிக் கொண்டது.
பதற்றத்தோடும் பதைபதைப்போடும் தன்னுடைய மகளை தேடி ஊர் முழுவதும் அலைந்து திரிந்துள்ளார் இரவு நேரத்தில். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மறுநாள் காலை சிறுமி வீடு திரும்பி இருக்கிறார். ஆறுதலோடு அவரை அரவணைக்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய மகள் தெரிவித்த விஷயம் தாயின் உள்ளத்தை உறைய வைத்திருக்கிறது. தனக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமி ஒவ்வொன்றாக விவரிக்க பேரதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று இருக்கிறார் அந்தப் பெண்மணி.
பாட்டுக் கச்சேரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது ஒரு கும்பல் தன்னை விரட்டி வந்ததாக அவர் கூறியிருக்கிறார். இரு சக்கர வாகனத்தில் இருவர், காரில் 5 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்திச் சென்று தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தாயிடம் கூற செய்வதெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளார் அவர். தன்னுடைய மகளுக்கு நேர்ந்த இந்த கொடூரம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் காமராஜபுரத்தை சேர்ந்த பிரபாகர் மற்றும் செம்மாண்டம் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 5 பேர் சிக்கினர். சதீஷ், நவீன் குமார், நந்தகுமார், தினேஷ், பாலசுப்பிரமணியன் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இந்த குற்றத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் கைது செய்யப்பட்ட ஒருவர் அதிமுக நிர்வாகி என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆம், கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒருவரான தினேஷ் என்பவர் அதிமுக ஐடி விங் நிர்வாகியாக உள்ளார். இவரது தந்தையும் அதிமுகவில் இருப்பதாக கூறப்படுகிறது. கோவில் திருவிழா கலைநிகழ்ச்சி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.