மணலியில் சிபிசிஎல் ஆலையில் பயங்கர தீ விபத்து.. அடுத்தடுத்து திக்.. பேரதிர்ச்சியில் மக்கள்!

 
CPCL

சென்னை மணலியில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மணலியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் ஆலை இயங்கி வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள், கொசஸ்தலை ஆற்றிலும் அதன் வழியாக எண்ணூர் பகுதியில் கடலிலும் கலந்தன.

CPCL

எண்னூர் பகுதியில் வெள்ள நீரோடு கலந்து ஏராளமானோரின் வீடுகளிலும் எண்ணெய் கழிவுகள் புகுந்தன. கடலில் கடந்த எண்ணெய் கழிவால், மீன்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, சிபிசிஎல் நிறுவனத்தின் ஊழியர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எண்ணெய் அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடலில் பல சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளதால், இன்னும் இந்தப் பணி தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சிபிசிஎல் நிறுவனத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை 10 மணி அளவில் ஏற்பட்ட தீ, பரவி, எங்கும் கரும் புகை மூட்டமாக இருந்து வருகிறது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றின் வழியாக கச்சா எண்ணெய் கடலில் கலந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web