மருது பாண்டியர் நினைவு தினம்.. வரும் 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருது பாண்டியர்கள் ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணில் இருந்து விரட்ட 1785 முதல் 1801-ம் ஆண்டு இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 1801-ம் ஆண்டு மாமன்னர் மருது சகோதரர்கள் ஆங்கிலேய அரசால், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் மூன்று தினங்களுக்கு பின் மருது சகோதரர்களின் உடல்கள் அவர்கள் கட்டிய காளையார்கோயில் எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணமடைந்த மருது சகோதரர்களின் குருபூஜை விழாவை அரசு விழாவாக தமிழ்நாடு அரசு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில், வரும் 27-ம் தேதி மருதுசகோதரர்களின் 222-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.