இரவோடு இரவாக மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்.. என்ன காரணம் தெரியுமா?

 
Mansoor Ali khan

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1990-ல் வெளியான ‘வேலை கிடைச்சுடுச்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மன்சூர் அலிகான். அதனைத் தொடர்ந்து 1991-ல் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் மிகவும் பிரலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களை இயக்கியுள்ளார். இவர், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி என்ற கட்சியின் தலைவராக இருந்தார்.

சமீபத்தில் இவரது கட்சி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தது. அதிமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன்சூர் அலிகான் ட்விஸ்ட் கொடுத்தார். அதிமுக விடுத்த அழைப்பின் பெயரிலேயே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குச் சென்றதாகக் கூறிய மன்சூர் அலிகான், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

Mansoor Ali khan

இதற்கிடையே இப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு அக்கட்சியில் இருந்து வெளியாகியுள்ளது. இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வளசரவாக்கத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நடைபெற்ற நிலையில், அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த செயற்குழு கூட்டத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூறினர்.

இது தொடர்பாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் கூறுகையில், “வளசரவாக்கத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்சியில் உள்ள தலைவர் பதவியை நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றினோம். தலைவரின் அதிகாரம் அனைத்தும் பொதுச்செயலாளருக்கு வழங்கப்படும் என்ற தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Mansoor-Alikhan

அவர் தேர்தல் நெருங்கும் போதெல்லாம் புதிது புதிதாக கட்சி ஆரம்பிக்கிறார்.. பிறகு காணாமல் போகிறார்.. ஆனால் நாங்கல் தேர்தலைக் கடந்தும் இருக்க வேண்டும் என்ற நினைப்பவர்கள். இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் தானா முடிவுக்கு எடுக்கிறார். யாரோ சொல்லி தகவல்களை எல்லாம் வைத்து முடிவு எடுக்கிறார். நிர்வாகிகளுடன் எந்தவொரு முடிவு குறித்தும் ஆலோசிப்பதில்லை.

வாய்க்கு வந்ததை ஊடகங்களில் பேசிவிட்டு செல்கிறார். இதனால் கட்சி நடத்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது. இது தேர்தல் காலம்.. இந்தக் காலத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போது தான் வரும் காலத்தில் கட்சியால் தொடர்ந்து செயல்பட முடியும். இதன் காரணமாகவே அவரை கட்சியில் இருந்து நீக்க ஒரு மனதாக முடிவு செய்தோம். இப்போதைக்குப் பொதுச்செயலாளருக்கு அனைத்து அதிகாரமும் மாற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய தலைவரைத் தேர்வு செய்யலாமா.. இல்லை இப்போது இருப்பது போலவே பொதுச்செயலாளர் தலைமையில் இயங்கலாமா என்பது குறித்து முடிவெடுப்போம். அவர் விடிந்தால் ஒரு பேச்சு என இருக்கிறார். அதெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. தற்போதைய சூழலில் அவரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். அவர் கட்சியின் தொண்டராக மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

From around the web