மோட்டார் சைக்கிள் திருடிய வடமாநில வாலிபர் அடித்துக்கொலை.. கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

 
Karur

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வடமாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் காவிரி ஆற்று பரிசல்துறை பகுதியில் நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து வாங்கல் கிராம நிர்வாக அதிகாரி பூர்ணிமா, வாங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, இறந்த வாலிபரின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

dead-body

விசாரணையில், வாங்கல் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (30) என்பவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை அங்குள்ள கடைவீதி பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் வினோத்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு சென்றார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் திருடன்... திருடன்... என கூச்சலிட்டவாறு, தனது நண்பர்களோடு மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று, வாங்கல் பரிசல்துறை அருகே அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் தாக்கப்பட்ட அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Vangal PS

இதனையடுத்து வினோத்குமார், கதிர்வேல், பாலாஜி, முத்து, கரண்ராஜ் ஆகிய 5 பேர் மீது வாங்கல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதில் வினோத்குமார், கதிர்வேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web