நிலப்பிரச்னையால் சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

 
Krishnagiri

கிருஷ்ணகிரி அருகே நிலப்பிரச்னை காரணமாக சித்தப்பா மீது இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன் (55). இவர், சவுளூா் பிரிவு சாலை அருகே கால்நடை தீவனக் கடை நடத்தி வருகிறாா். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அண்ணன் மகன் செந்தில் (26) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.

Fire

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதியும் இரு குடும்பத்தினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, செந்திலின் தாயார் ராணி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் சின்னவன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நான்கு பேரும் தலைமறைவாகினர். இந்நிலையில் காவேரிப்பட்டிணத்தில் உள்ள தனது மாட்டுத்தீவன கடையில் அமர்ந்திருந்த சின்னவனை பார்த்த செந்தில், தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார்.


இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

From around the web