மனைவியை அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்த கணவன்.. மாமியாரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஆத்திரம்!!

 
chinnasalem

சின்னசேலம் அருகே மனைவியை அம்மிக்கல்லால் அடித்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள நாகுப்பம் கிழக்கு காட்டுகொட்டகை பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பிள்ளை (44). இந்த தம்பதிக்கு கார்த்திக், ரமேஷ் என்ற மகன்களும், அம்சவள்ளி என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்று விட்டதால், கணவனும், மனைவியும் தனியாக வசித்தனர்.

மனைவி சின்னப்பிள்ளையின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த 30 ஆண்டுகளாக அவரது வீட்டில் நடைபெறும் இன்ப, துன்ப நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் ராமர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி மனைவி சின்னப்பிள்ளையின் தாய் செல்லம்மாள் நல்லாத்துாரில் உயிரிழந்தார். தாயின் இறப்புக்கு செல்லக் கூடாது என ராமர் கூறிவிட்டார். 

Murder

ஆனால், சின்னப்பிள்ளை, மகன் கார்த்திக், மகள் அம்சவள்ளி ஆகியோருடன் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். இதனால் கோபமடைந்து ராமர், கடந்த சில தினங்களாக மனைவி சின்னப்பிள்ளையுடன் பேசாமலும், வீட்டில் சாப்பிடாமலும் இருந்தார். தொடர்ந்து கடந்த 29-ம் தேதி தாயின் காரியத்தில் பங்கேற்க, சின்னப்பிள்ளையும், அவரது மகள் அம்சவள்ளியும் சென்றனர்.

காரியம் முடிந்த பின் வீட்டிற்கு வந்த சின்னப்பிள்ளை, வீட்டிற்குள் செல்லாமல், திணணையில் படுத்துக் கொண்டார். இரவு 9 மணியளவில் துாங்கிக் கொண்டிருந்த மனைவி சின்னப்பிள்ளையின் தலையில் ராமர் அம்மிக்கல்லால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த சின்னப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Chinnasalem PS

பின்னர், மனைவியை கொலை செய்து விட்டதாக அம்சவள்ளியின் கணவர் ராஜாவிடம் தெரிவித்துவிட்டு, ராமர் சின்னசேலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். வழக்கு பதிந்து ராமரை கைது செய்த சின்னசேலம் போலீசார், சின்னப்பிள்ளையின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

From around the web