படையலில் வைக்கப்பட்ட மதுவை வாங்கி குடித்தவர் ரத்த வாந்தி எடுத்து பலி.. நாகர்கோவிலில் சோகம்!
நாகர்கோவில் அருகே கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சுவாமிக்கு படையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படையிலில் உணவுடன், மதுபாட்டில்களும் வைக்கப்பட்டதாக தெரிகிறது.
பூஜைகள் முடிந்ததும் படையலில் வைக்கப்பட்ட மதுவை, பூசாரி சிலரிடம் கொடுத்துள்ளார். அதனை வைத்தியநாதபுரம் செல்வகுமார் (49), வடலிவிளை அருள் ஆகியோர் பெற்றுக்கொண்டு அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று சாப்பிட்டார்களாம்.
இந்த நிலையில் அருள் தனது நண்பர்களுக்கு போன் செய்து, மது குடிக்க வந்த விவரத்தையும், அதனை குடித்த பிறகு தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி உள்ளார். மேலும் உடனே இங்கு வந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து நண்பர்கள் அங்கு சென்ற போது, அருள் மயக்க நிலையில் இருந்துள்ளார். செல்வகுமார் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நண்பர்கள் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், செல்வகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அருள் உடல் நலம் மோசமாக உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகே எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும்.