அம்மா, அப்பா மன்னித்து விடுங்கள்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை
திண்டிவனம் அருகே பேருந்து நிறுத்தத்தில் வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜக்காம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் நேற்று காலை சடலமாக கிடந்தார். அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியபடி இருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், மயிலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இறந்து கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. கடலூர் மஞ்சக்குப்பம் பாஷியம் தெருவை சேர்ந்த சிவராஜ் என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் (35). பி.எஸ்சி. வேதியியல் படித்துள்ள இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் உள்ள ஒரு அமில தொழிற்சாலையில் ஊழியராக பணியில் சேர்ந்தார். பின்னர் தொழிற்சாலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த 1-ம் தேதி வீட்டிற்கு வந்தார்.
விடுமுறை முடிந்ததும் கடந்த 4-ம் தேதி இரவு 7 மணிக்கு வேலைக்காக ஆந்திராவுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திண்டிவனம் ஜக்காம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் ஜெயபிரகாஷ், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக அவர், புதுச்சேரியில் இருந்து தனது பெற்றோருக்கு கூரியர் மூலம் பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் ஜெயபிரகாசின் ஏடிஎம் கார்டு, தொழிற்சாலையில் பணிபுரிந்ததற்கான அடையாள அட்டை, ஜெயபிரகாஷ் எழுதிய கடிதம் ஆகியவை இருந்தன. அந்த கடிதத்தில், அம்மா என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வேற வழி தெரியல. செய்த தப்புக்கு நான் அசிங்கப்படலாம். நீங்கள் என்ன பண்ணுவிங்க. என்னோட மனநிலையை கட்டுப்படுத்த முடியல. இதுக்கு மேல நான் சரியாக இருப்பனானு தெரியல. பிரச்சினை எல்லாம் சரியாகுமான்னும் தெரியல. அப்பாவையும் ரொம்ப கஷ்டப்படுத்துகிறேன். பிரியாவும் எவ்வளவுதான் பொறுத்து போகும். உங்களை பிரிந்து சத்தியமாக என்னால இருக்க முடியாது. ஆனால் வீட்டுக்கு சத்தியமாக வரமாட்டேன்.
இந்த கடிதத்தை நீங்கள் படிக்கும்போது நான் இருப்பேனா என்று தெரியவில்லை. நான் சாகுறதுக்கு பூச்சி மருந்து வாங்கி வைத்திருக்கிறேன். இப்போது குடிக்கப்போகிறேன். நானும் என்னை திருத்திக்கிட்டு நல்லா இருக்கனும்னுதான் நினைத்தேன். ஆனால் முடியல. அம்மா, அப்பா மன்னித்து விடுங்கள். பிரியா சாரி டா. நான் எங்கையாவது கண்ணுக்கு தெரியாத இடமா போயிட்டு செத்துடுறேன். எனக்கு கடைசியா உங்ககிட்ட பேசனும்னு ஆசைதான். ஆனால் பேசினால் என்னோட மனசு மாறிவிடும். அதனால் பேசல என்று கூறப்பட்டு இருந்தது.
இதைபார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில் மயிலம் போலீசார், ஜெயபிரகாசை செல்போனில் தொடர்பு கொண்டு, தங்களது மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். இதையடுத்து பெற்றோர் பதறியடித்துக்கொண்டு கதறி அழுதபடி மயிலத்துக்கு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.