மதிய உணவில் கிடந்த பூரான்.. 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

 
Cuddalore

சிதம்பரம் அருகே அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பூரான் கிடந்ததால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வர்கூர்பேட்டை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் இன்று மதியம் சமைக்கப்பட்ட உணவை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

Chidambaram

இந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு, வாந்தி, வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் உணவை ஆய்வு செய்த போது, உணவில் விஷப் பூச்சிகளில் ஒன்றான பூரான் கிடந்துள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு 28 பேரும், மற்றவர்கள் அண்ணாமலை நகரில் உள்ள அரசு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும், மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனைக்கு பதைபதைப்புடன் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷப்பூச்சி பூரான் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Annamalai Nagar PS

சம்பவம் நடைபெற்ற பள்ளியில் உணவு சமைப்பாளர் மட்டுமே இருப்பதாகவும், பொறுப்பாளர் இல்லை எனவும் கூறப்படுகிறது. பொறுப்பாளர் மற்றும் உணவு சமைப்பாளர் இருந்திருந்தால் கவனக்குறைவு ஏற்படாமல் இருந்திருக்கும் எனவும் பெற்றோர்கள் சார்பில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web