தேர்வில் குறைந்த மதிப்பெண்.. 12ம் வகுப்பு மாணவி தற்கொலை... திருவள்ளூரில் பரபரப்பு

 
Tiruvallur

திருவள்ளூர் அருகே 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அனிதா (17), தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். 

Suicide

சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி அனிதா, 600க்கு 435 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால், நன்றாக படித்து வந்த நிலையில் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்ததாகவும், இதனால் அனிதா மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அனிதா வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே பெற்றோர்கள் நீண்ட நேரம் ஆகியும் அனிதா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து அறைக்குள் பார்த்தபோது தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Tiruvallur Taluk PS

இதையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web