ரூ.10 லட்சம் இழப்பு.. கடன் தொல்லையால் இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை.. ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம்
அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமு (38). இவர் அரக்கோணம் பழனிபேட்டையில் உள்ள பகுதியில் போண்டா கடை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக ராமு, செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தார். ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலீடு செய்து விளையாடியவருக்கு குறிப்பிட்ட தொகை கிடைத்தது. அதனால் பண ஆசை அதிகரித்து அதிகளவில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார். ஆனால், எதிர்பார்த்தபடி பணம் திரும்பக் கிடைக்கவில்லை.
விட்ட பணத்தை பிடிக்க கடன் மேல் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது. பெரிய அளவில் போட்ட பணம் கிடைக்காததால் சுமார் ரூ.10 லட்சம் அளவுக்கு பணத்தை இழந்தார். இது குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் ராமுவின் செல்போனை அபகரித்து உடைத்தெறிந்தனர். ஆனால் ரம்மிக்காக அவர் வாங்கிய கடன் அவரை விடவில்லை.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு ராமுவிற்கு அழுத்தம் கொடுத்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ராமு, மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றார். ஆனால், அரக்கோணம் அருகே தணிகை போளூர் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றில் மிதந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து உடலை மீட்டனர். ராமு உயிரிழந்து சடலமாக கிடப்பது தெரிந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். அதில் ஆன்லைன் ரம்மியில் 10 லட்சத்தை இழந்த விரக்தியில் விபரீத முடிவெடுத்திருப்பது தெரியவந்தது. ராமுவின் தற்கொலை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.