வருவாய் இழப்பு.. நவம்பர் 25-ம் தேதி முதல் ஆவின் பச்சை பால் பாக்கெட்  நிறுத்தம்!

 
Aavin

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை வரும் 25-ம் தேதி முதல் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சார்பாக நாள்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின் நிறுவனத்தில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் மெஜந்தா நிறத்திலும், சமன்படுத்தப்பட்ட பால் நீல நிறத்திலும், நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிறத்திலும், கொழுப்புச் சத்து நிறைந்த பால் ஆரஞ்சு நிறத்திலும், டீ மேட் - கொழுப்புச் சத்து நிறைந்த பால் சிவப்பு நிறத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோர் விலை குறைவாக உள்ள ஊதா, பச்சை நிற பால் பாக்கெட்டுகளையே வாங்குகின்றனர்.

Aavin

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் (4.5% கொழுப்பு சத்து உள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்) விநியோகத்தை வரும் 25-ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்த பால் விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் விற்பனை 40 சதவீதம் ஆகும். 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாகவும் இது உள்ளது.

அதேநேரம், அதிக கொழுப்பு சத்து கொண்ட பால் தயாரிக்க, வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணெய், பால் பவுடர் ஆகியவற்றை ஆவின் அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட்டை விநியோகம் செய்வதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், தலைநகர் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய புறநகர் மாவட்டங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதுவும், மிக குறைந்த அளவிலேயே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Aavin

சென்னையிலும் நேரடி ஆவின் பாலகங்கள், பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து வருகிறது. அதற்கு மாற்றாக, 3.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட ‘டிலைட்’ ஊதா நிற பால் பாக்கெட் (சமன்படுத்தப்பட்ட பால்) விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் சு.வினீத் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆவின் நிர்வாகம் எல்லா காலக்கட்டங்களிலும், மக்கள் நலன், அவர்கள் விருப்பம் அறிந்து செயல்படுகிறது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தடையின்றி விநியோகம் செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

From around the web