ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு.. மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

 
chennai

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் லாரி டிங்கரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தனுஷ் (23). இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதரபி 3-ம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். அவ்வாறு விளையாடியதில் அதிக அளவிலான பணத்தை இழந்துள்ளார். இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக அவர் தொடர்ந்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

Suicide

தொடர்ச்சியாக தான் இழந்த பணத்தை மீட்டெடுக்க, தனது தந்தையிடம் 24 ஆயிரம் ருபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை 4 ஆயிரம் மட்டுமே வங்கிக் கணக்கு மூலம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்துடன் அறையின் உள்ளே சென்று கதவை தாழிட்டுக்கொண்ட தனுஷ், இறுதியாக அப்பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி, அந்த பணத்தையும் இழந்ததாக கூறப்படுகிறது. இதில் தனுஷ் மிகுந்த மன வேதனையடைந்துள்ளார்.

இதனையடுத்து, தனுஷ் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த தனுஷின் தங்கை, கதவைத் தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் அவர் கதவை திறக்காததால், அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அப்போதும் தனுஷ் கதவை திறக்காததால் குடும்பத்தினர் ஆர்கே நகர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

RK Nagar PS

அப்போது தனுஷ் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் தனுஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web