கால்பந்து போட்டியில் தோல்வி.. மாணவர்களை ஷூ கால்களால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர்!

 
Salem

விளையாட்டு போட்டியில் தோற்றதால் மாணவர்களை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கால்பந்து போட்டியில் அந்த பள்ளியின் மாணவர்கள் தோற்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார்.


இதுதொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை செல்போனில் பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

suspend

இந்த நிலையில் விளையாட்டு போட்டியில் தோற்றதால் மாணவர்களை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வீடியோ வைரலான நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலையை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

From around the web