ரூ.50 லட்சம் கடன்.. தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.. ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்!

 
Ariyalur

ஓசூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அதிகளவில் கடன் வாங்கிய வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிவாசகன் (36). இவர், ஓசூர் 2-வது சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அருணா. இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் விசாகன் என்ற ஆண் குழந்தை உள்ளான். மணிவாசகன் தனது குடும்பத்தினருடன் ஓசூர் தோட்டகிரி பகுதியில் வசித்து வந்தார்.

மணிவாசகனுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் அதிக நேரம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ஏராளமான பணத்தை இழந்து அதிகளவில் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது.

Suicide

இந்த நிலையில் ஊருக்கு சென்ற மனைவி அருணா நேற்று காலை தனது கணவருக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுத்து பேசாததால் அச்சமடைந்த அவர் அருகே வசிப்பவர்களுக்கு போன் செய்து தங்கள் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறினார். பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் சென்று பார்த்தபோது மணிவாசகன் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக மணிவாசகத்தின் மனைவி, ஓசூர் அட்கோ காவல் நிலைத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மணிவாசகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு மேஜையில் மணிவாசகன் தனது குடும்பத்தினருக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

Hudco PS

அதில் நான் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்து விட்டேன். மேலும் ரூ.50 லட்சம் வரை கடன் உள்ளது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் எழுதி வைத்திருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web