தமிழ்நாட்டில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்!
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 3) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை (ஏப்ரல் 4) தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 5 முதல் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 3) முதல் 7-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 தினங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த 5 தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39-41 செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37-39 செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 33-37 செல்சியஸ் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40-70 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 சதவீதமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 3) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.