மாநில அரசு நிதியுதவியுடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்... விரைவில் திறப்பு விழா!!

 
kilambakkam

சென்னை பெருநகரக் குழுமத்தின் நிதியுதவியுடன் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மக்கள் எளிதாக வரும் வகையில் இந்த புதிய ரயில் நிலையம் அமைக்க மாநில அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. நிதியுதவி அளித்தால் விரைவில் பணிகளைத் தொடங்கலாம் என்று ரயில்வே தரப்பில் கூறியதை அடுத்து பெருநகரக் குழுமம் நிதியுதவி தர ஒப்புக்கொண்டது.

ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுவதற்கு தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதையடுத்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. ரயில் நிலைய நடைமேடை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஒரு நடைமேடையில் மேல் கூரை அமைக்கப்பட்டு விட்டது.

தரைத்தளம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் உள்ளது. இதுதவிர, உயர்நிலை மின்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. டிக்கெட் புக்கிங் அலுவலகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, மற்றொரு நடைமேடைக்கான பணிகளும் நடைபெறுகின்றன. அடுத்தமாதத்துக்குள் ரயில் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்

From around the web