கடத்தப்பட்ட 2 வயது குழந்தை.. நள்ளிரவில் நரபலி பூஜை.. கடைசி நொடியில் காப்பாற்றிய நாகர்கோவில் போலீஸ்!!

நாகர்கோவில் பகுதியில் 2 வயதுக் குழந்தையைக் கடத்தி, மந்திரவாதி ஒருவர் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அகிலா. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகனும், 2 வயதில் சஸ்விகா என்ற மகளும் உள்ளனர். கண்ணன் சென்னையில் ஐடி ஊழியராக பணியாற்றி வருவதால் இவர்கள் குடும்பமாக சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் வீட்டின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தக்கலை சென்ற கண்ணன் குடும்பத்தினர் விருந்தை முடித்து விட்டு அகிலாவின் தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு குடும்பமாக அனைவரும் பேசி கொண்டிருந்த போது வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த 2 வயது மகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரவு நேரம் என்றும் பாராமல் குழந்தையை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். கிணற்றில் விழுந்திருக்குமோ என்றெல்லாம் எண்ணி தண்ணீரை வாரி தேடியுள்ளனர். சிசிடிவியிலும் குழந்தை பதிவாகதால், குழந்தை அருகில் தான் இருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து போலீசார் வீடு வீடாக சென்று குழந்தை இருக்கிறதா என சோதனை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
அப்போது வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள தென்னந்தோப்பில் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மந்திரவாதி ஒருவர் காணாமல் போன குழந்தையை மடியில் வைத்து பூஜை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து குழந்தையை மீட்ட போலீசார், மந்திரவாதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட மந்திரவாதி ராசப்பன் (68) என்பதும், மனைவி, மகன் உயிரிழந்த நிலையில் தனியாக மாந்திரீக தொழிலில் ஈடுபட்டு வருவதையும் கண்டுபிடித்தனர். மேலும், நகையுடன் விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க திட்டமிட்டு, குறுக்கு வழியில் குழந்தையை கடத்தி வீட்டிற்கு எடுத்து சென்று அதற்கான பூஜைகள் நடத்தி கொண்டிருந்த போது போலீசார் கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு நிலைக்குலைந்த போலீசார் மந்திரவாதியை கைது செய்தனர். மேலும், குழந்தையை 4 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.