திமுக நாடாளுமன்றக்குழு தலைவராக கனிமொழி நியமனம்.. முதல்வர் மு.க.ஸ்டலின் அறிவிப்பு

 
Kanimozhi

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகக் கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தியது. கடந்த முறை திமுக கூட்டணி தேனியைத் தவிர்த்து 39 தொகுதிகளில் வென்றிருந்த நிலையில், இந்த முறை 40 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர்.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் 22 பேர் போட்டியிட்டனர். திமுகவினர் 21 பேரும், கொமதேகவில் ஒருவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இந்த 22 பேரும் வெற்றி பெற்றனர். இதற்கிடையே திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. அதில் நீட் விலக்கு உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

DMK

இதற்கிடையே இன்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவராகக் கனிமொழி நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, திமுக மக்களவை குழு துணைத் தலைவராகத் தயாநிதி மாறன், திமுக மக்களவை கொறடாவாக ஆ.ராசா நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்ந்து கழக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்பி, மக்களைவைக் குழுத் தலைவராகக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்பி நியமிக்கப்படுகிறார்கள்.

DMK

மக்களைவைக் குழுத் துணைத் தலைவராகக் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்பி, மக்களைவை கொறடாவாகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, எம்.பி, மாநிலங்களவைக் குழுத் தலைவராகக் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்பி., மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், எம்பி நியமிக்கப்படுகிறார்கள்.

மாநிலங்களவை கொறடாவாகத் தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்பி, இரு அவைகளின் பொருளாளராகக் கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்பி நியமிக்கப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

From around the web