ரஜினியை வென்ற கமல்.. மாநிலங்களவை உறுப்பினராக மனு தாக்கல்!!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலச்சந்தரின் கரம் பட்டு கதாநாயகனாக உயர்ந்த கமல்ஹாசனுடன், அதே பாலச்சந்தரால் சிறு வேடத்தில் அறிமுகப் படுத்தப்பட்டவர் தான் ரஜினிகாந்த். பின்னர் மூன்று முடிச்சு படம் மூலம் வில்லனாக உயர்ந்த ரஜினி தொடர்ந்து வில்லன் கேரக்டர்களிலேயே நடித்து வந்தார். கமலுடன் இரண்டாவது நாயகனாக ஏராளமான படங்களில் நடித்து வந்த ரஜினிக்கு பைரவி நாயகனாக உயர்வைக் கொடுத்தது.
அதன் பின்னரும் கமலும் ரஜினியும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் பேசி தனித்தனி ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய போது எம்ஜிஆர் - சிவாஜி போல் கமல் - ரஜினி என்ற போட்டி தொடங்கியது. ஆரம்பத்தில் கமல் - ரஜினி என்றே எழுதப்பட்டு வந்த நிலையில் முரட்டுக்காளை, பில்லா போன்ற படங்களின் அபார வெற்றிகள் ரஜினியை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. அன்று முதல் ரஜினி- கமல் என்ற வரிசையாகி விட்டது.
ஆனாலும் இருவர் படங்களும் ஒருத்தருக்கொருத்தர் போட்டியினால் வசூலை வாரிக்குவிக்கத் தவறியதில்லை. இந்நிலையில் அரசியலுக்கு வரப்போவதாக முதன் முதலில் அறிவித்து வேலையைத் தொடங்கியவர் ரஜினி தான். அவருக்குப் போட்டியாக திமுக தான் கமல்ஹாசனை அரசியலுக்கு கொண்டு வந்தார்கள் என்ற பேச்சு கூட அடிபட்டது.
அறிவித்த வேகத்தில் இரண்டே ஆண்டுகளில் அரசியல் கடையை இழுத்து மூடிவிட்டு மீண்டும் தீவிரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார் ரஜினி. சட்டமன்றத் தேர்தலை சிறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு தன்னுடைய அரசியலைத் தீவிரப்படுத்தினார் கமல். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியில் சேர்ந்து ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தேர்தல் போது உறுதியளித்தது போல் தற்போது கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வாய்ப்பளித்து வெற்றி பெறச் செய்கிறது.
இதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தார் கமல்ஹாசன். விரைவில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பு வர உள்ளது. கமல்ஹாசன் எம்.பி. என இனி அழைக்கப்பட உள்ளார்.
அரசியலில் ரஜினியை வென்றுள்ளார் கமல் என்றே கூறலாம். ஆனால் இந்தப் போட்டி இன்னும் முடிவடையவில்லை என்றும் கூற முடியும். இளையராஜாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுத்தது போல் பாஜக ரஜினிக்கும் அடுத்த சுற்றுல் எம்.பி ஆகும் வாய்ப்பைத் தரக்கூடும்.