கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய்!

 
TVK

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விஜய் நலம் விசாரித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. நேற்று காலையில் இருந்தே ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம்  ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

நேற்று இரவு நிலவரப்படி 18 பேர் பலியான நிலையில், இன்று காலையில் மேலும் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 35 ஆக அதிகரித்தது. இன்று பிற்பகல் மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ள நிலையில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

TVK

இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை பெறுபவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் அவர் கேட்டறிந்தார்.

முன்னதாக கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.


கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

From around the web