கட்சியில் சேர்ந்தாச்சு... கஸ்தூரிக்கு மைலாப்பூர் தொகுதி கிடைக்குமா?
திரைப்படக் கலைஞர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் என பல்வேறு அடையாளங்களுடன் தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் பேசி வந்த நடிகை கஸ்தூரி இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜக உறுப்பினராக சேர்ந்து கொண்டார். பாஜகவிலிருந்து நடிகைகள் கௌதமி, காயத்ரி ரகுராம் விலகி அதிமுகவில் இணைந்த நிலையில், நடிகைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதை நிரப்பும் வகையில் கஸ்தூரியின் வருகை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நடிகை மீனா பாஜகவில் இணையப் போகிறார், அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில் கஸ்தூரி இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மீனா வந்து விடுவார் என்றும் தகவல்கள் வருகிறது. பாஜகவில் இணைந்த கஸ்தூரி மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. வெறும் பிரச்சாரத்துடன் அரசியல் பயணம் நின்று விடக்கூடாது, சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் சென்றால் தான் அரசியலில் நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்று அறிந்து வைத்துள்ளாராம்.
மைலாப்பூர் தொகுதி தனக்கு கிடைக்காது என்று தெரிந்து தான் மைத்ரேயன் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார் என்று கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மைலாப்பூர் தொகுதியை கேட்கிறார் என்ற நிலையில் மைலாப்பூரை பாஜகவுக்கு விட்டுத் தருமா அதிமுக என்ற கேள்வியும் எழுகிறது. மைலாப்பூர் இல்லை என்றால் தியாகராய நகர் தொகுதியை கேட்கவும் கஸ்தூரிக்கு விருப்பம் இருக்கலாம்.
